காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக தற்போது சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை சேப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கனோர் குவிந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள்  எதிர்பார்ப்பை வெளிப்படுத்த இளைஞா்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியம் அதை கண்டுகொள்ளாமல் காவல்துறையை இறக்கி இந்த போட்டியை நடத்தவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை இயக்குனர் பாரதியாஜா அறிவித்தது போல, பாரதிராஜா தலைமையில் சீமான் மற்றும் சினிமா இயக்குநர்கள் ஏராளமானோர் அண்ணாசாலையில் குவிந்தனர்.

அங்கு தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராட்டம் வெடித்துள்ளதால், ஹோட்டல் அறையிலேயே கிரிக்கெட் வீரர்கள் இன்னும் விளையாட்டு மைதானத்துக்கு செல்லாமல் உள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் ஐபிஎல் டிக்கெட்டுகளை எரித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது.  நொடிக்கு நொடி அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் பகுதிகளில்  ஆயிரக்கணக்கானோர் திரள்வதால் பதற்றம் நிலவிவருகிறது.