Chennai - Tiruchirapalli National Highway Traffic jam What is the reason? A paragraph ...

காஞ்சிபுரம்

வாகன ஓட்டிகளின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உக்கிரமாக இருக்கும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை. காரணம் என்ன? தீர்வு என்ன? விரிவான அலசல் உள்ளே...

முன்னெல்லாம் போக்குவரத்து நெரிசல் என்றால் சென்னை அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, தாம்பரம் போன்ற முக்கியமான இடங்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசல்களையும் சில மணி நேரங்களில் கடந்துவிடலாம்.

அதன்பின்பு, சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் என போக்குவரத்து சற்றேறக்குறைய குறைந்தது. இப்போது, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக் காலங்களில் தி.நகர், புரசைவாக்கம் போன்ற இடங்களில் போக்குவரத்து திணறும்.

இது போன்ற போக்குவரத்து முடங்குவது எல்லாம் சென்னைக்குள்தான். சென்னைக்கு வெளியே அப்படி இருக்காது என்று நினைக்கிறீர்களா?

அதுதான் தவறு. புறநகர் பகுதியான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கு தெரியுமா? தொடர்ந்து வாசிங்க தெரியும்.

புறநகர் பகுதியான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு ஆகிய ஊர்கள் அசுர வேகத்தில் வளர்ந்து சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்துவிட்டன.

சென்னைக்கு மிக அருகில் என அடுக்குமாடி குடியிருப்புகளை கூவி கூவி விற்றதன் விளைவு தான் இந்த அசுர வளர்ச்சி. இப்போ நெருக்கடியுமாகி உள்ளது.அதுமட்டுமா, தொழிற்சாலைகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் சென்னையில் இருந்து நாள்தோறும் இலட்சக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி பறக்கின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரையான பகுதியில் போக்குவரத்து நெரிசல் இரவு வரை களைக் கட்டும்.

குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கூடுவாஞ்சேரி சிக்னல், ஆகிய பகுதிகளை வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் கடக்க பல மணி நேரம் ஆகும். இந்த பகுதியை கடந்துவிட்டாலே நம்ம ஊரு வந்திடுச்சுபா! என்ற நினைப்பு வாகன ஓட்டிகளும், மக்களும் நிம்மதி அடைவர். அப்படியொரு டிராஃபிக்.

இதுவே முக்கிய பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் காலையிலேயே கோயம்பேடில் பேருந்து ஏறினால் பரனூர் சுங்கச்சாவடியை தாண்டுவதற்கு பல மணி நேரம் ஆகிவிடும். இதனால் பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் அமர்ந்து பயணம் செய்யும் மக்கள் கூட எரிச்சலின் உச்சத்தில் இருப்பர்.

இதுமட்டுமின்றி இந்தப் பகுதிகளில் சிறிய விபத்துகள் ஏற்பட்டால்கூட போக்குவரத்து நெரிசலால் கூட்டம் படையாக மாறும். அப்புறம் என்ன! அன்னைக்கு நாள் தகதிமிதா தான். போக வேண்டிய இடத்திற்கு மக்கள் சொன்ன நேரத்திற்கு போன மாதிரிதான்.

இதுல கொடுமையே! காயம் அடைந்தவர்களை காப்பாற்ற வரும் அவசர ஊர்தி கூட விபத்து நடந்த இடத்திற்கு வர சில மணி நேரங்கள் ஆகும் என்பதுதான். இதனால் சில சமயங்களில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து விடுவதும் நடந்த்கொண்டுதான் இருக்கிறது.

மேலும், தென் மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக சென்னை மருத்துவனமைக்கு வரும் அவசர ஊர்திகள் உரிய நேரத்தில் மருத்துவனைக்கு வருவதே மிகவும் சவாலான ஒன்றுதான்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலை போக்குவரத்து குறித்து மக்கள் கூறுவது:

"இந்த சாலையில் உள்ள கட்டிமுடிக்காத பாலங்களை விரைந்து கட்டி முடிக்கவேண்டும்,
ஊரப்பாக்கம் பள்ளிக்கூட பேருந்து நிறுத்தம், காரணைப்புதுச்சேரி கூட்ரோடு, கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் போன்ற பகுதியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்,

கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்,

முக்கியமான சாலை சந்திப்பு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும்,

காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்,

சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,

தாம்பரம் - செங்கல்பட்டு வரை அறிவிக்கப்பட்ட மேல்மட்ட சாலை அமைக்கும் பணியை மத்திய - மாநில அரசுகள் வரும் 2018-ஆம் ஆண்டு தொடக்கத்திலே பணியை தொடங்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்" என்று மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:-

"சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தினமும் இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால்தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கூடுவாஞ்சேரி போக்குவரத்து பிரிவுக்கு காவலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, 25-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஐந்து பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இவர்களே தொடர்ந்து பணி செய்யும் போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

போக்குவரத்து காவலில் இருந்தவர்கள் பலர் ஒய்வு பெற்றுவிட்டனர். தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலாளர்களுக்கு பயிற்சி நடந்து வருகிறது.

இந்த பயிற்சி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து காவலாளார்கள் அதிக எண்ணிக்கையில் அரசு நியமிக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம். அதுவரை மக்களும், வாகன ஓட்டிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று அவர் கூறினார்.