திருவண்ணாமலை

ரூ.34 கோடி உலக வங்கி நிதி உதவியுடன் செண்பகதோப்பு அணை தடுப்பணைகள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்படும் என்று கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செண்பகதோப்பு அணையை ஆய்வு செய்தார்  கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம். 

ஆய்வு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "செண்பகதோப்பு அணை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.34 கோடியில் வெள்ளூர், அலியாபாத், எஸ்.வி.நகரம், காமக்கூர் ஆகிய பகுதிகளில் செல்லும் கால்வாய்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்படும்.

மேலும், செண்பகதோப்பு அணைப் பகுதியில் உள்ள முள் மரங்கள் பொதுப்பணித் துறை மூலம் அகற்றப்படும். 

செண்பகதோப்பு அணையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். 

இந்த ஆய்வின்போது, அ.தி.மு.க மாவட்டத் துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர்  பொய்யாமொழி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.