அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 23 இடங்களில் சோதனை சாவடி அமைத்து, 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படும் என்று காவல்துறை சூப்பிரண்டு ராஜசேகரன் கூறினார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்குத் தேர்தல் மற்றும் நடத்தை விதிகள் குறித்த பயிற்சி ஞாயிற்றுக் கிழமை கரூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.
இதில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு இளங்கோ உள்பட துணை காவல்துறை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காவல்துறை சூப்பிரண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி முழுவதும் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை திருச்சி 1–வது பட்டாலியனில் இருந்து 2 கம்பெனியை சேர்ந்த 114 காவலாளர்கள் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் அரவக்குறிச்சி காவலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். அதேபோன்று மத்திய பாதுகாப்பு படையில் இருந்து 4 கம்பெனிகளில் இருந்து 400 காவலாளர்கள் கேட்டுள்ளோம். விரைவில் அவர்கள் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 23 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படும். தற்போது ஈசநத்தம், வெஞ்சமாங்கூடலூர், மார்க்கம்பட்டி பிரிவு ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலாளர்கள் என 880 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொகுதி முழுவதும் 11 இடங்களில் உள்ள 28 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் 10 பேர் தேர்தலில் குந்தகம் விளைவிப்பவர்களாக கணக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 6 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தொகுதி முழுவதும் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை, ஆட்சியருடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
