Check out the announcement of the Railway Action!

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமல்லாது படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து அவர்கள் பயிலும் பள்ளி அல்லது கல்லூரிக்கு அனுப்பப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

பேருந்தோ, ரயிலோ எதுவாக இருந்தாலும், மாணவர்கள், மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் சென்ற ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர், கத்தியை வைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த நடவடிக்கையால், பயணிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகினர்.

ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள், சத்தமாக பாட்டு பாடிக் கொண்டும், தட்டிக் கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். மேலும், இறங்கும் வழியில் மாணவர்கள் நின்று கொண்டு, பயணம் செய்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு பயணத்தை பழக்கமாக கொண்டுள்ள மாணவர்கள், இதனை ஜாலியாகவே கருதி வருகின்றனர். ஆனால், இது சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தாலும், அவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்வதில்லை. இது குறித்து யாராவது எடுத்து சொன்னாலும், அதனை அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. சில நேரங்களில் சொல்பவர் தங்கள் காதுகளை பொத்திக்கொண்டு போக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே, ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதாவது, ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியுள்ளார்.

மேலும், ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லூயிஸ் தெரிவித்துள்ளார்.