சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகேட்டு பொதுமக்கள், ஆர்கே நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் மனு செய்கின்றனர்.

அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வீடுகள், குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க அனுமதி  அளிப்பதுடன், அவர்களுக்கான ஆணையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட தேசிய நகர், செரியன் நகர், இருசப்பன் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் மனு செய்தனர். இவ்வாறு மனு செய்தவர்களுக்கு அதிகாரிகள், இணைப்பு கொடுப்பதற்கான ஆணையும் வழங்கியுள்ளனர்.

அதன்படி,, குடிநீர் வாரிய ஊழியர்கள், அப்பகுதி மக்களிடம், வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துவிட்டு ரூ.2,500 பெற்று செல்கின்றனர். ஆனால், அவர்கள் கொடுக்கும் ரசீதில் ரூ.100 என குறிப்பிடுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை தனபால் நகரை சேர்ந்தவர் மகேந்திரன்.இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு, மனு செய்து இருந்தார். அதன்பேரில் ஊழியர்கள், அவரது வீட்டில் இணைப்பு கொடுத்தனர். அதற்கான தொகையாக ரூ.2,500 வசூல் செய்தனர். ஆனால், அவருக்கு கொடுத்த ரசீதில் ரூ.100 என எழுதி கொடுத்து சென்றனர். இதனால், அவர் கடும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தார்.

குடிநீர் வாரியத்தில் நடக்கும் முறைகேடு மற்றும் மோசடி குறித்து பொதுமக்கள் புகார் செய்தால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்டும் காணாமல் உள்ளனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்துகின்றனர்.