விமான டிக்கெட் எடுத்து தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி : எமிரேட்ஸ் நிறுவனத்தின் முகவராக நடித்த பெண் கைது!

சுவேதா சுரேஷ் என்ற பெண் பலரிடம் சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்து தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சுவேதா சுரேஷ் மோசடி வலையில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா மற்றும் பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கி பெரும் தொகையை இழந்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர் அவரது குடும்பத்தினருக்கு வெளிநாடு சென்று வர விமான டிக்கெட் எடுத்து தருவதாகக் கூறி 26 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா நிகழ்ச்சிகளில் பிரபலங்களிடம் அறிமுகமாகும் சுவேதா, தன்னுடைய வசப்படுத்தும் பேச்சால் தான் ஒரு பயண ஏற்பாட்டாளர் கூறி, 2 லட்ச ரூபாய் விமான டிக்கெட்டுகளை 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தருவதாகக் கூறுவார். தான் எமிரேட்ஸ் நிறுவனத்தின் முகவர் என்றும், தனக்கு அந்நிறுவனம் 95 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி அதற்கான போலி நகல் ஒன்றையும் காண்பிப்பார்

 முதலில் ஒன்றிரண்டு டிக்கெட்டுகளை சலுகை விலையில் பெற்று தந்து அவர்களது நம்பிக்கையை பெற்று, அந்த பிரபலங்களின் குடும்பத்தினர், நண்பர்களிடமும் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுவார் என விசாரணை நடத்திய போலீஸார் கூறுகின்றனர். அவ்வாறு கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பல பிரபலங்களிடம் பண மோசடி செய்துவிட்டு சுவேதா, சென்னையில் வாடகைக்கு வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை மாற்றியுள்ளாதாக கூறுகின்றனர். 

இந்த விவகாரத்தில், தங்களது நிறுவனத்தின் பெயரில் மோசடி நடக்கிறது என்று பலமுறை புகார் கூறியும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அலட்சியம் காட்டியதாக புகார் கொடுத்த பிரபலங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மோசடியில் சுவேதா என்ற பெண் மட்டுமல்லாமல் எமிரேட்ஸ் நிறுவனத்தின் சில ஊழியர்கள் உள்ளிட்ட கும்பல் ஒன்று பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இது தொடர்பாக சுவேதாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.