அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஜில்லென்ற செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழகத்தின் பல இடங்களில் தினமும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் ஈடுகொடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் செய்தியை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.