chain snatching from a girl in chennai
சென்னை நகரில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இரவு மற்றும் பகல் நேரம் இல்லாமல் பைக் ஆசாமிகளின் அட்டகாசத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விஜயலட்சுமி என்ற பெண், சாந்தோமில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு தோழியுடன் மொபட்டில் சென்றபோது, பைக் ஆசாமிகள் நகையை பறித்தால், அவரது தோழி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து அந்த பைக் ஆசாமியை விரட்டி சென்ற விஜயலட்சுமி, கலங்கரை விளக்கம் அருகே சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதி பரிதாபமாக இறந்தார். பைக் ஆசாமியும் படுகாயம் அடைந்தார்.
இதேபோல், விஜயலட்சுமி என்ற பெண், தனது மகளுடன் மொபட்டில் சென்றபோது, பைக் ஆசாமிகள் நகையை பறித்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
இதைதொடர்ந்து, சென்னை அண்ணாசாலை அருகே பல்லவன் சாலையில், போக்குவரத்து துறை ஊழியர் ஒருவரிடன் மனைவி மொபட்டில் சென்றபோது, பைக் ஆசாமிகள் கைவரிசையை காட்டியபோது, நிலைதடுமாறிய அவர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேன் மீது மோதி கால் எலும்பு முறிந்தது.
இதுபோன்று பைக் ஆசாமிகள் தொடர்ந்து, நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதால், நடந்து செல்வதற்கு மட்டுமின்றி, வாகனங்களில் செல்லவும் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் விஜயராணி. இன்று காலை அவர், கணவருடன் பைக்கில் எழும்பூருக்கு புறப்பட்டார். ஈவெரா சாலை, அரசு பொது மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்மநபர், அவரது கழுத்தில் இருந்த 27சவரன் செயினை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
