மெடிக்கல் ஷாப் மூலம் போதை மருந்துகள் விற்பனை செய்ததாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இதுபோன்ற போதை மருந்துகளை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் ஈவு இரக்கமின்றி பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்து செல்லும் வீடியோ காட்சிகள் நம்மை பதற வைக்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது?
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமடல், அச்சப்படாமல் எப்படி நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

போலீசில் மாட்டினாலும் சரி... பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கினாலும் சரி... எதுவாக இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், நகையை பறிகொடுக்கும் பெண்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. நகைகளைக் காப்பாற்ற நினைக்கும் பெண்கள் படுகாயமடைகின்றனர். 

இதுபோன்ற குற்றவாளிகள் எப்படி கொடூரமாக நடந்து கொள்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மெடிக்கல் ஷாப்களில் எளிதாக கிடைக்கக்கூடிய போதைதரும் ஒரு மருந்தை உட்கொண்டு குற்றவாளிகள் கொடூரமாக நடந்து
கொள்வது தெரியவந்துள்ளது.

இருமலுக்காக சாப்பிடும் சிரப் பாட்டில் முழுவதுமாக குடித்தால் போதை உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை, சிந்தாதரிப்பேட்டையில் இரண்டு மருந்துகடைகளில் போதை மருந்து விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர். இதையடுத்து, மருந்து விற்பனை செய்யும் சாகுல் அமீது, இப்ராகிம், வேல்முருகன் ஆகிய 3 பேரை போலீசர் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர். மேலும், போதை அளிக்கும் மருந்து பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.