ரூபாய் நோட்டுகள் மாற்றத்தில் மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உரியது என தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று 2வது நாளாக பிரசாரம் செய்தார். கரூரில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் நேற்று மாலை முதல் நிகழ்ச்சியாக ஈசநத்தம் என்ற இடத்தில் கே.சி.பழனிசாமியை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
அப்போது, அவர் கூறியபோது, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி செயல்படாத அரசு என்று நான் பல கூட்டங்களில் பேசி வருகிறேன். பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்தால் அது உண்மை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு வழக்கை விசாரித்து, அதில் அளித்த தீர்ப்பில், இந்த (அ.தி.மு.க.)ஆட்சியை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறது. தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்ல இந்த ஆட்சி மீது அரசியல் சட்டம் 360ன்படி ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் நீதித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.150 கோடியில் ஒரு காசுகூட செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது.
100 பணியாளர்களை நியமனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறார்கள். தமிழக அரசு கடன் வாங்கிய ரூ.4 லட்சம் கோடியை திருப்பி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் இது செயல்படாத அரசு என்று குற்றம்சாட்டுகிறேன்.
கடந்த 2 நாட்களாக ஏழை, எளிய மக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் படும் அவதியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மத்திய அரசு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்கள் வங்கிகள் முன்பு, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அவதிப்படும் காட்சியை பல இடங்களில் பார்த்தேன்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உரியது தான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மக்களின் அவதியை போக்க மாநில அரசு என்ன ஏற்பாடு செய்தது? முதலமைச்சர் பொறுப்பை ஏற்று இருக்கிற நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இது சம்பந்தமாக அமைச்சரவையை கூட்டினாரா? அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாரா? எதுவும் செய்யவில்லை. அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காததால் தான் மக்கள் இவ்வளவு அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த அரசுக்கு பாடம் புகட்ட தி.மு.க.வுக்கு வாக்களித்து கே.சி.பழனிசாமியை வெற்றிபெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
