சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் திருச்சி- சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க விரைவில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பார்தமாலா என்னும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6,741 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழி சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் சாலை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற தடையால் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை - திருச்சி இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆய்வுப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சி வரை 310 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைப்பது குறித்து விரைவில் ஆய்வுப் பணி தொடங்க வாய்ப்புள்ளது.  

இதில், பிள்ளையார்பட்டியில் இருந்து தூத்துக்குடி வரையும் புதிய பசுமை வழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை 160 கி.மீ தொலைவில் அமைகிறது. ஏற்கெனவே, தஞ்சையில் இருந்து பிள்ளையார்பட்டி வரை 82 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. 

ஏற்கனவே, சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சென்னை - திருச்சி வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதால், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.