மிக்ஜாம் புயல்: பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை!
மிக்ஜாம் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரவுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் எனவும், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மிக்ஜாம் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 11ஆம் தேதி (நாளை) தமிழகம் வரவுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை அக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதையடுத்து, வருகிற 12ஆம் தேதி (நாளை மறுநாள்) தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு அக்குழுவினர் டெல்லி செல்லவுள்ளனர்.
மிக்ஜாம் புயல்: நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
முன்னதாக, மிக்ஜாம் புயல் பாதிப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து சென்னை வந்து ஆய்வு செய்தார். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், முதல்வருடனும் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்து சென்றார்.
அதேசமயம், தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடியும், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் ரூ.561 கோடியும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.