விருதுநகர்

விருதுநகரில் சிமெண்டு சாலை போட்டத்தில் முறைகேடு நடந்ததாக கொடுத்த மனுவில், இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “வச்சக்காரப்பட்டி கிராம பஞ்சாயத்தில் 2014-15-ஆம் நிதியாண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பூசாரிப்பட்டி, தடங்கம், ஆர்.எஸ்.ஆர்.நகர், அக்கரகாரப்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியில் ரூ.51 இலட்சம் வரை முறைகேடுகள் நடந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கும், மாவட்ட திட்ட இயக்குனருக்கும் பல முறை புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கிராம வளர்ச்சி நிர்வாக என்ஜினீயர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை நடந்த முறைகேடு தொடர்பானது என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மனுவில் தெரிவித்துள்ள புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து “மனுதாரர் இது பற்றிய புகாரை விருதுநகர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவை இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் விசாரித்து ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதி ஏ.செல்வம் அதிரடியாக உத்தரவிட்டார்.