Cellphone companies confirmed
2015 ஆம் ஆண்டின்போது, மழை வெள்ளம் காரணமாக செல்போன் சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மழைக் காலத்தின்போது செல்போன் சேவை தங்கு தடையின்றி கிடைக்க தனியார் செல்போன் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. சென்னையில், நேற்று விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் செல்போன் சேவையும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக யாரும் தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனை ஏற்ற தனியார் செல்போன் நிறுவனங்கள், செல்போன் சேவை தங்குடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளது. இதேபோல, பி.எஸ்.என்.எல். நிறுவனம் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
