நாடு முழுவதும் ஓப்போ மொபைல்ஸ் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களிலும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை  மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்களே செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஓப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் கிளை அமைத்து நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அந்த நிறுவனத்தின் ஷோரூம் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. ஓப்போ நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஓப்போ நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்தது. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய பகுதியாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள ஓப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால் நேற்று காலை, வழக்கம்போல் பணிக்கு வந்த சுமார் 60 ஊழியர்களை உள்ளே வைத்து மாலை 6.45 மணி அளவில் வெளியே அனுப்பினர். நேற்று காலையிலிருந்து நடைபெற்று வரும் இந்த சோதனையானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிய வந்திருக்கிறது.

பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை சுங்குவார்சத்தித்தில் இயங்குகிறது. இந்நிறுவன வளாகத்தில் சாம்சங், ஒப்போ, எம். ஐ, ஐபோன், விவோ உள்ளிட பல்வேறு நிறுவனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. 5 மணிநேரமாக தொடர் சோதனைகடந்த 2015ஆம் ஆண்டு முதல் எம். ஐ செல்போனிற்கு பாரத் எஃப்ஐஎச் லிமிடெட் (Bharat FIH limited) எனும் நிறுவனம் உதிரி பாகங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அதிக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து நேற்று சென்னையில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்குவார்சத்திரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரமாக நடைபெற்ற தொடர் போராட்டமானது பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அதே வளாகத்தில் இயங்கும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பெண்கள் போராட்டத்தில் சிக்கிய இந்த நிறுவனம், தற்போது ஐடி ரெய்டு என தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இங்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு செல்போன் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் பாரத் எப்.ஐ.எச், என்ற தொழிற்சாலை உட்பட 20 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி கையாளுவதல், அந்த பொருட்களை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மாஸ்டர் படத் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அடையாறில் உள்ள கஸ்துரிபாய் நகரில் உள்ள அவரது இல்லம், ஆதம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

25 இடங்களில் அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இன்பினிட்டி எஸ்தெல், எஸ்தெல் ரீகிளைம், இன்டெவ் இன் டைம் ஏர் கார்கோ சர்வீஸ், கெர்ரி இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ்,எ பி.எஸ்.வி ஷிப்பிங் ஏஜென்சி, எண்ணூர் கார்கோ கண்டைனர் டெர்மினல்,இன்டெவ் ஷிப்பிங் சர்வீஸ், எஸ்தெல் குளோபல் இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ், டைம்லேப்ஸ் இன்போமேட்டிக்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ், ஹௌடி வென்சர்ஸ் உட்பட 10 நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை மறைத்துக்காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.