Celebrate the environment without harm to the environment and the health of the people
அரியலூர்
சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் பாதிப்பு இல்லாமல் போகித் திருநாளை கொண்டாடுங்கள் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடுவது வழக்கம்.
இந்த நாளில், வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றோம். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.
மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது.
இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, போகி நாளன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், சுற்றுச்சூழல், மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கவும் மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டார்.
