CCB of Coimbatore City Arrested Tamil Actress Shruthi Over Cheating NRI of 41 Lakh
வெளிநாட்டில் வேலை செய்து வரும் அருண் என்பவரை திருமணம் ஆசை காட்டி பல லட்சம் சுருட்டியதாக நடிகை ஸ்ருதியை மேலும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகையாக நடித்தவர். இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளார்.
ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர், திருமண தகவல் இணையதளத்தில் ஸ்ருதியின் போட்டோவைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை என்ன செய்தார் என்பதை ஸ்ருதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேபோல், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ₹43 லட்சத்தை ஸ்ருதி பறித்து கொண்டதாக கடந்த 2014ம் ஆண்டு ஏற்கனவே பதிவு செய்ப்பட்ட வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஸ்ருதி, இதேபோல் பலரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிதாக போலீசுக்கு புகார்கள் குவிய தொடங்கின. இதனையடுத்து போலீசார் ஸ்ருதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர், வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது மகன் அருணுக்கு திருமணம் செய்ய ஸ்ருதியை பெண் பார்த்து, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.
மேலும், ஸ்ருதியின் அம்மா உடல்நிலை சரியில்லாத போது ₹4 லட்சம் செலவு செய்துள்ளார். பின்னர் அருண் தனது கிரெடிட் கார்டையும் ஸ்ருதியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை எல்லாம் ஏமாற்றிய பின்னர் ஸ்ருதி திருமணம் வேண்டாம் என்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் ஸ்ருதி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோவை சிறையில் இருக்கும் ஸ்ருதிக்கு வாரன்ட் பிறபிக்கப்பட்டு நேற்று சென்னை, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு வக்கீல் முருகன் ஆஜராகினார். போலீசார் தரப்பில் ஸ்ருதியை காவலில் வைத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ருதியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
