ஈரோடு,
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரித் தண்ணீரில் கலந்ததால், காவிரித் தண்ணீர் புற்றுநோய் உருவாக்கும் தண்ணீராக மாறியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மாநகர் பகுதி மக்கள் காவிரி ஆற்றுத் தண்ணீரைத்தான் குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்காக வைராபாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு குழாய்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆழ்குழாய் கிணறுகள் இருந்தாலும் காவிரி தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று ஈரோடு மக்கள் காவிரி தண்ணீரையே குடித்து வந்தனர்.
ஆனால், சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் நேரடியாக வந்து கலந்தன.
ஒருபுறம் காலிங்கராயன் வாய்க்கால் இரசாயன விஷக்கழிவு வாய்க்காலாக மாறியது. அதேநேரம் ஈரோடு, வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம், பெரியசேமூர், சூரம்பட்டி என்று நகர் பகுதிகளில் இருந்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகளும் காவிரியில் கலந்தது. இதனால் காவிரி தண்ணீர் புற்றுநோய் உருவாக்கும் தண்ணீராக மாறியது.
எனவே ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு வைராபாளையத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டு, மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு இன்னும் அனுமதி பெறப்படவில்லை.
ஊராட்சிக்கோட்டை தண்ணீர் வரவில்லை என்றாலும், காவிரி தண்ணீரை தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் அளித்து வந்தது.
ஆனால் காவிரியில் கலக்கும் ஆலைக்கழிவுநீரால் தற்போது ஆற்றுநீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பச்சை நிறமாக காணப்படும் தண்ணீரைத்தான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடங்களில் வீட்டு உபயோகத்திற்காக எடுத்துச் செல்கிறார்கள்.
கடந்த வாரம் காவிரியில் இருந்து நீரேற்றம் செய்து வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகும் சாக்கடையாக இருந்தது. வீடுகளில் குழாய்களை திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது. இது மாநகர பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கூறியதாவது:–
“சில நிறுவனங்களில் இருந்து கழிவுகளை காவிரி ஆற்றில் வெளியேற்ற மண்ணுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் குறைந்தாலும் குழாய் பதிக்கப்பட்டு இருப்பது வெளியே தெரியாத வகையில் போட்டு உள்ளனர். தற்போது வெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் கழிவுநீர் சாக்கடையாக மாறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலைக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருகிறது.
எனவேதான் மாநகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் துர்நாற்றத்துடன் உள்ளது. இதை குடித்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆலைக்கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆலை உரிமையாளர்களும், அனைத்து மக்களின் நலன் கருதி மனச்சாட்சியுடன் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
