மேட்டூர் அருகே காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட  4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்‍கப்பட்டிருப்பதால், டெல்டா பகுதியை நோக்‍கி வினாடிக்‍கு சுமார் 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

இந்நிலையில் மேட்டூர் அருகேயுள்ள ரெட்டியூர் பகுதியில் கோபால் என்பவர் வீட்டிற்கு உறவினர்களாக வந்த வாணிஸ்ரீ, தனிஸ்ரீ, சரவணன், மைதிலி, ஹரிஹரன், ரவீணா ஆகிய 6 பேரும், அருகிலுள்ள காவிரியாற்றில் குளிக்‍கச் சென்றுள்ளனர்.

நீரின் வேகம் அறியாமல் தண்ணீரில் இறங்கியதால் அவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் தனிஸ்ரீ என்பவர் மட்டும் நீச்சல் தெரிந்ததால் கரை திரும்பி உயிர்தப்பினார். எஞ்சிய 5 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம எனவும் தெரிவித்துள்ளார்