உங்களுக்கும் சேர்த்துதானே போராட்டம் நடத்துறோம்; போலீஸ்காரங்க எல்லாம் இனி குடிக்க தண்ணீர் வேண்டாமா என்று போராட்டத்தை தடுத்த போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோவையில் பத்திரிகையாளர்களின் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதேபோல் சென்னையில் மே 17 இயக்கத்தினர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தாக்குதலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. 

திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அமைப்பினர் சார்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குமரன் நினைவகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தை துவக்கிய விவசாயிகள், கூட்டமாக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது, காவல் துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசாரைப் பார்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சார் எங்களை போராட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்துறீங்க.. உங்களுக்கும் சேர்த்துதானே போராடிக்கிட்டிருக்கோம். போலீஸ்காரங்களுக்கு எல்லாம் இனி குடிக்க தண்ணீர் வேண்டாமா என்று முழுக்கமிட்டனர். 

அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள், ரயில் மறியல் செய்ய முயன்றபோது விவசாயிகள் அனைவரும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர்.