திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற "லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 6,784 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்றத் தலைவர் பிச்சம்மாள், சார்பு நீதிபதி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, அம்பத்தூர், பொன்னேரி, திருவொற்றியூர், பூந்தமல்லி நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்றது.

காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட 6,875 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவற்றில் 6,784 வழக்குகளுக்கு, ரூ. 9 கோடியே 80 இலட்சத்து 97 ஆயிரத்து 606 பைசல் தொகையாக வழங்கி தீர்வு காணப்பட்டது.