பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி திண்டுக்கல் லியோனி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாக் கூட்டம், சென்னை, தி.நகர், டாக்டர் சதாசிவம் சாலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார். அப்போது நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் லியோனி பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக பேசியிருந்தர்.

 

மேலும், தமிழக அரசு பற்றியும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.லியோனியின் இந்த பேச்சு குறித்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, பாண்டிபஜார் சட்டம் - ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திண்டுக்கல் லியோனி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைத்தல், மிரட்டுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் திண்டுக்கல் லியோனியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.