தேனி

விளைநிலத்தை அபகரித்து விற்பனை செய்தது தொடர்பாக தனியார் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் தேனி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாலர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி பகுதியில் சொந்தமாக 14 சென்ட் பூர்வீக விளைநிலம் மற்றும் கிணறு இருந்தது. 

கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த சுருளியாண்டி மகன்கள் ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் சேர்ந்து இந்த கிணற்றை மூடிவிட்டு, நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்றுவிட்டனராம். 

இந்த நிலத்தை 15 பேர் வாங்கியுள்ளனர். மேலும், இதில் வில்லங்கம் இருப்பது தெரிந்தே நிலம் வாங்கி உள்ளார் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த இருதயமேரி. இவருக்கு மதுரை மேலமாசி வீதியில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் கடன் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின்பேரில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ராமச்சந்திரன், முருகன், இருதயமேரி மற்றும் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது தேனி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியம்மாள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.