சென்னை கொடுங்கையூர் மீனபாம்பாள் நகரில் நித்யானந்தம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 3 தனியார் வங்கி ஏடிஎம் மையம், ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் கடை உள்பட 7 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒரு ஏடிஎம் மையத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியில் ஆனந்தன் கடைக்கு தேவையான சிப்ஸ் தயாரிக்கும் வேலை நடந்து வந்தது. இங்கு நேற்று இரவு தொழிலாளர்கள் சிலிண்டரை அணைக்காமல் சென்றதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 47 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ராஜதுரை என்பவர், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில், இருப்புக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதனால், பாதியளவு இருந்த ஏடிஎம் மையமும் எரிந்தது. அதில் இருந்த ரூ.5 லட்சமும் சாம்பலானது.

இந்த விபத்து தொடர்பாக கொடுங்கையூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கியாஸ் சிலிண்டரை சரியாக அணைக்காமல் சென்றதும், இருப்புக்காக 10 சிலிண்டர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, சிப்ஸ் கடை உரிமையாளர் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தனியார் வங்கி ஏடிஎம் மையத்தின் பாதியளவை, சிப்ஸ் தயாரிக்கும் வேலைக்காக ஒதுக்கி கொடுத்த கட்டிட உரிமையாளர் நித்யானந்தம் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விபத்து நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள், இன்று காலை ஆய்வு செய்தனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.