விருதுநகர்

விருதுநகரில் விசைத்தறி கூடம் விரிவாக்கத்துக்காக முறைகேடாக அனுமதி வழங்கிய  நகராட்சி ஆணையர் உள்பட நால்வர் மீது இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.

கடந்த 2011–ஆம் ஆண்டு முதல் 2013–ஆம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். 

இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல்முருகன். 

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விரிவாக்கம் செய்வதற்காக நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்த அல்போன்சிடம் சென்றார். 

சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்றிருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விரிவாக்கத்துக்கான விண்ணப்பத்தை தரவில்லை. ஆனால், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்த தகவலின்பேரில் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன்பேரில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இலஞ்ச ஒழிப்பு காவலாளார்கள் உயரதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயரதிகாரிகளும் அனுமதி அளித்தனர். 

உடனே இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய நால்வர் மீதும் வழக்குபதிந்தனர். 

இதுகுறித்து தொடர்ந்து நால்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.