தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள அ.குமரெட்டியபுரத்தில் ஆழ்துளை கிணற்றை சீரமைக்க விடாமல் தடுத்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அ.குமரெட்டியபுரம் மக்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு உதவி ஆட்சியர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து சென்றனர். 

நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் அதிகாரிகள் வந்து ஆள்துளை கிணற்றை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயர், யூனியன் ஆணையாளர் சிவபாலன், தனி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். 

அவர்கள் அந்த பகுதியில் உள்ள அடிபம்புகளை அகற்றி, ஆழ்துளை கிணற்றை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முயற்சித்தனர். இதனையறிந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூட்டமாக திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். 

அவர்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தனி அலுவலர் முத்துக்குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரின்பேரில், அ.குமரெட்டியபுரத்தை சேர்ந்த மகேஷ், சுந்தரமூர்த்தி, செல்வராசு மற்றும் கிராம மக்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், குழாய்களை சேதப்படுத்தியது போன்று பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.