தமிழக அரசு இணையதள பக்கத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ மெயில் முகவரிகள், இல்லாததால் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்க இயலவில்லை என்று மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி. தியாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், தமிழக அமைச்சர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல் ஹாசன் பேட்டி ஒன்றில் கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊழல் குறித்த விவரங்களை, அமைச்சர்களின் செல்போனிலும், இ மெயிலிலும் அனுப்பும்படி ரசிகர்களுக்கு கமல் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கமலின் இந்த டுவிட்டர் பதிவை அடுத்து, இணையதளத்தில் இருந்த அமைச்சர்களின் செல்போன் எண்கள், இ மெயில் மற்றும் முகவரிகள் மாயமானது.

இந்த இணையதளத்தை என்.ஐ.சி பராமரித்து வருகிறது. இது பற்றி என்ஐசி அதிகாரி ஒருவர் கூறும்போது, விவரங்களை அமைச்சர்கள் கொடுத்தால் மட்டுமே அதை பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் அவை கிடைக்க பெறவில்லை என்பதால் வெற்றிடமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ மெயில் முகவரிகள் நீக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி. தியாகராஜன், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்துக்கு வர உள்ளது.

அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ மெயில் முகவரி இணையதளத்தில் இல்லாததால் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்க இயலவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.