கரூர் 

கரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற அடியார்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் இடித்து தள்ளியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் பலத்த காயமடைந்தனர். தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகிளிப்பட்டியிலிருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அடியார்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பாத யாத்திரையாக புதன்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர். 

 அவர்கள் குழுவாக கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை மணத்தட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் திடீரென நிலைத்தடுமாறி அடியார்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. 

அப்போது கார் மோதியதில் முருகானந்தம் மனைவி விஜயா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மகளிப்பட்டி கோபாலகிருஷ்ணன் (52), சக்திவேல் மனைவி இந்திராணி (35), செந்தில்குமார் மனைவி சிறும்பாயி(35), ரவிச்சந்திரன் மனைவி போதும்பொண்ணு (50),  அவரது மகள் பிரியா (22), செல்வம் மனைவி ரேவதி (30), முத்து மனைவி சகுந்தலா (40), தன்ராஜ் மனைவி பிச்சையம்மாள் (55) உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.   

இதனைக் கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் குளித்தலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்தனர். தப்பியோடிய கார் ஓட்டுநர் குளித்தலை கடம்பர்கோயிலைச் சேர்ந்த ராமசாமி மகன் சரவணக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.