கிருஷ்ணகிரி

கிரிவலம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது கிருஷ்ணகிரியில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது அதிபயங்கரமாக கார் மோதியதால் பெண் உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர், டி.முதுகானப்பள்ளியில் தனியார் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஐதராபாத்தைச் சேர்ந்த கோபாலப்பா (55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரமா (50). 

இதே நிறுவனத்தில் மற்றொரு மேலாளராக வேலை செய்து வந்தவர் வாசுதேவராஜ் (45). இதே நிறுவனத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி நாதன் (45). 

இவர்கள் நூற்பாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல காரில் புறபப்ட்டனர். இவர்கள் சென்ற காரை ஓசூர் அருகே உள்ள கனிமங்கலத்தைச் சேர்ந்த திருமலை (35) என்பவர் ஓட்டிச் சென்றார்.  கிரிவலத்தை முடித்துவிட்டு நேற்று அதிகாலை அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள தில்லை நகர் அருகில் அதிகாலை 3.30 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது கார் அதிபயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற கோபாலப்பா, அவரது மனைவி ரமா மற்றும் வாசுதேவராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.  மற்றொரு அலுவலரான மீனாட்சி நாதன், ஓட்டுநர் திருமலை ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் பலியான மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு காவலாளர்கள் அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மீனாட்சிநாதன், திருமலை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

கிரிவலம் சென்றுவிட்டு திரும்பிவரும்போது தனியார் ஏற்பட்ட இந்த விபத்தில் மூவர் பலியான சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.