திருப்போரூரில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மடையத்தூரைச் சேர்ந்த சிவா. விவசாயி. நேற்று மாலை சிவா, தனக்கு சொந்தமான காரில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்போரூர் சென்றார். பின்னர் அனைவரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.

திருப்போரூர் உள்ள ஐயப்பன் கோயில் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பகுதியில் புகை வந்தது. இதை பார்த்ததும் சிவா காரை நிறுத்தினார். அதற்குள், திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவா, மனைவி, 2 குழந்தைகளையும் உடனடியாக காரில் இருந்து வெளியேற்றி அவசர அசவரமாக கீழே இறங்கினார். அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது.

தகவலறிந்து சிறுசேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள், கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவினால் காரில் தீப்பற்றியதா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.