கடலூர்

கடலூரில் கார் ஓட்டுநரை கொன்று கை, கால்களை கட்டி கடலில் வீசப்பட்ட வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை பல்லவன் நகரைச் சேர்ந்தவர் தணிகாசலம் மகன் வினோத் (27). கார் ஓட்டுநர். இவர் கடந்தாண்டு முதல் கடலூர் முதுநகரில் தங்கி இருந்து மாணவ - மாணவிகளை காரில் ஏற்றிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவந்தார்.

கடந்த 28-ஆம் தேதி வினோத் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து வினோத்தை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பம் கடலில் நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

இது குறித்த தகவலின்பேரில் கடலூர் முதுநகர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் காணாமல்போன வினோத் என்பது உறுதியானது. மேலும், அவரின் கை, கால்களை கட்டி கடலில் போட்டு மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வினோத்தின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் சரவணன், ஆண்டவர் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலாளர்களின் விசாரணையில் வினோத், மாணவி ஒருவரை கடத்தி சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அவரை அந்த மாணவியின் உறவினர்கள் யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் அவரை கடத்தி கொலை செய்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மாயமான நாளான கடந்த 28-ஆம் தேதி அன்று கடைசியாக அவர் கடலூர் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் வினோத் தை கடத்திச் சென்றது  பதிவாகி உள்ளதா? என்று விசாரணை தொடர்கிறது.