திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டிவனம் அருகே சாரம் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.  இந்த விபத்தில் சிக்கியவர்கள் குன்றத்தூரைச் சேர்ந்த மூக்கையன் தேவர் குடும்பத்தினர். எட்டு மாத பெண் குழந்தைக்கு, காது குத்துவதற்காக, தேனியில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு அவர்கள் காரில் சென்றுள்ளனர். 

இதன் பின்னர், குலதெய்வ சாமி கும்பிட்டுவிட்டு, குழந்தைக்கும் காது குத்திவிட்டு அவர்கள் சென்னை திரும்பியபோது, திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் நின்றிருந்த லாரி மீது அவர்கள் வந்த கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 7 பேரில் மூக்கையன் மனைவி ராமலட்சுமி, மகன் விஜயகுமார் மருமகள் சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கார் ஓட்டுநர் அருண், ஜான் சாமுவேல் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 8 மாத பெண் குழந்தை காயமின்றி உயிர் பிழைத்தது. 

மற்றொரு விபத்தில் மதுரையில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் மதுரை, வடுகப்பட்டியில் நடந்துள்ளது. குடும்ப விழாவிற்கு சென்று விட்டு திரும்புவதற்காக சாலையைக் கடந்தபோது கார் மோதி விபத்துக்குள்ளானது.