உள்ளாட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் கிராமப்புற வாக்காளர்களை தக்க வைப்பதற்காக மது வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காக, சிலர், தங்கள் சொந்த பணத்திலிருந்து ஏராளமாக செலவு செய்ய வேண்டியுள்ளதை எண்ணி திகைத்துப் போயுள்ளனர். மதுபானம் வாங்கிக் கொடுப்பது; அடிக்கடி அழைத்து பேசுவது போன்றவற்றின் மூலம் தன் ஆதரவாளர்களை தக்க வைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தமிழகம் முழுவதும், 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தி, வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திடீரென தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிராமப்புறங்களில் ஊராட்சி தேர்தல், ஒன்றிய குழு தேர்தல், மாவட்ட ஊராட்சி போன்ற அமைப்புகளின் பதவிகளுக்கு போட்டியிட விரும்பியவர்கள், அதற்காக ஆதரவாளர்கள் மற்றும் ஓட்டளிக்கும் வாக்காளர்களை சேகரித்து வந்தனர். அதற்காக, கடந்த வாரங்களில், பணத்தை தண்ணீராக செலவழித்தனர்.

எனினும், தேர்தல் இரத்தாகிப் போனதால், ஆதரவாளர்களையும், வாக்காளர்களையும் தக்க வைக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரின் ஆதரவாளர்களை மற்றொருவர் இழுக்கும் முயற்சியும் நடப்பதால், போட்டியிட விரும்புபவர்கள், செல்வாக்கை தாக்க வைக்க கடுமையாக பாடுபட வேண்டியுள்ளது.

இதற்காக, 'டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கு ஆதரவாளர்களை கூட்டிச் செல்வது; டீ கடைகளுக்கு அழைத்துச் சென்று தேனீர் வழங்கி உபசரிப்பது; பார்க்கும் போதெல்லாம், 'கும்பிடு' போட்டு வைப்பது; கிராமப்புறங்களில் காணப்படும் நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக் காட்டி, பதவிக்கு வந்ததும், முதல் காரியமாக அதை சரி செய்ய உறுதியளிப்பது என, பலவித, 'வேடங்களில்' நடித்து வருகின்றனர்.