Can not she have a golden chain? Thieves who threatened her husband
மனைவியின் கழுத்தில் செயின் போட மாட்டியா? என்று கணவனை கொள்ளையர்கள் மிரட்டிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர், கணபதியாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (80). மனைவி சௌந்தர்யா (80) உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 மகன்களும் 2 பெண்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாராயணன் தன் மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 2 மணியளவில் வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.
அப்போது அவர்கள், சௌந்தர்யா அணிந்திருந்த வளையல்கள், மோதிரம், கம்மல் உள்ளிட்டவற்றை பறித்தனர். கழுத்தில் தாலி மட்டுமே அணிந்திருந்த சௌந்தர்யாவிடம், ஏன் செயின் போடவில்லை என்று அவரை மிரட்டியுள்ளனர் கொள்ளையர்கள். அதற்கு சௌந்தர்யா இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
பின்னர், நாராயணனிடம் சென்ற கொள்ளைக் கும்பல், ஏன் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுக்க மாட்டியா? எனக் கூறி நாராயணன் முகத்தில் கத்தியை வைத்து கீறியுள்ளனர்.
இதன் பின்னர், கொள்ளையர்கள், கணவன் - மனைவியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு 9 சவரன் நகையுடன் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் சென்ற பிறகு நாராயணன் சத்தம் போட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அருகில் இருந்தோர் அவர்களை மீட்டனர். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
