சேலத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதற்கும், பட்டாசுகள் வாங்குவதற்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடைகளில் குவிகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் கொள்ளையர்கள், பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசைகளை காண்பிப்பது வழக்கம்.
இதுபோன்ற குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுப்பதற்காக சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் சஞ்ஜய்குமார் கூறும்போது,
சேலத்தில் முக்கிய கடைவீதிகளில் 50க்கும் மேற்பட்ட கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாநகர் முழுவதும், 200 ஒயர்லஸ் சிசிடிவி கேமிராக்கள் உள்பட மொத்தம் 300 காமிராக்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குற்ற தடுப்புகண்காணிப்புகுழுவினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மாநகர் பகுதியில் நகைபறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை கொண்டு அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
