Asianet News TamilAsianet News Tamil

கின்னஸ்-க்கு தயாராகுது நம்ம ஊரு சல்லிக்கட்டு; ஏப்ரல் 16-ல் “சில்லுனு ஒரு சல்லிக்கட்டு”

Callikkattu where are our ready-to Guinness April 16 Sillunu a callikkattu
callikkattu where-are-our-ready-to-guinness-april-16-si
Author
First Published Apr 13, 2017, 10:40 AM IST


சிவகங்கை

சிவகங்கையில் “சில்லுனு ஒரு சல்லிக்கட்டு” என்ற பெயரில் நம்ம ஊரு சல்லிக்கட்டை கின்னஸ் சாதனை முயற்சியாக ஏப்ரல் 16-ல் நடத்த இருக்கின்றனர். இதற்கு இலங்கை அமைச்சர்கள் செந்தில்தொண்டைமான், ஆறுமுகத்தொண்டைமான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் எம்.புதூரில் உள்ள கண்டிக்கருப்பர் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டாக மாற்றி நடத்தப்பட்டு வந்தது.

2014-ல் நீதிமன்ற தடை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சல்லிக்கட்டு, வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி கின்னஸ் சாதனை முயற்சியாக “சில்லுனு ஒரு சல்லிக்கட்டு” என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது.

கிராம மக்களுடன் தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு சங்கத்தினர் இணைந்து இதனை நடத்துகின்றனர்.

இதுகுறித்து, எம்.புதூரைச் சேர்ந்த காந்தி, ரமேஷ் தொண்டைமான் ஆகியோர் கூறியது:

“இந்த சல்லிக்கட்டில் அதிக காளையை அடக்கும் முதல் ஐந்து மாடுபிடி வீரர்களுக்கும், 5 பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மலேசியா சுற்றுலாச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகள் உரிமையாளர்களுக்கும் பரிசாக குளிர்சாதனப்பெட்டி, கார், பைக், வாஷிங்மெஷின், லேப்டாப் உள்ளிட்ட 15 வகைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், சல்லிக்கட்டு போட்டியை மெரினா கோப்பை போட்டியாக நடத்துகிறோம். இதற்காக எங்கள் கிராமத்தில் கிரிக்கெட் அரங்கு போல் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் சல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்படும். சிறப்பு விருந்தினர்கள் அமரும் பகுதி ராஜதர்பார் போல் அமைக்கப்பட்டு உச்சியில் சேர, சோழ பாண்டியர் கொடிகள் பறக்கவிடப்படும்.

மாடு பிடி வீரர்கள், சேரர், சோழர் பாண்டியர் என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியும் இரண்டு மணி நேரம் களத்தில் நிற்கும். மொத்தம் ஆறு மணி நேரத்தில் சல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். 600 காளைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட உள்ளன.

அதிகமான காளைகளை குறைவான நேரத்திற்குள் திறந்து விளையாடுவது, பாரம்பரிய முறைப்படி நடத்துவது என இரண்டையும் கின்னஸ் சாதனைக்காகப் பதிவு செய்திருக்கிறோம். இதை நேரில் பார்த்து பதிவு செய்ய கின்னஸ் பிரதிநிதிகள் வர இருக்கிறார்கள்.

மேலும் போட்டியைக் காண எம்.புதூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சங்கத் தலைவரும் இலங்கை அமைச்சருமான செந்தில்தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகத்தொண்டைமான் ஆகியோர் சல்லிக்கட்டைத் தொடங்கி வைக்க உள்ளனர்” என்று பேசினர்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios