திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வே வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டத்தால் நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்களின் போராட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவசர சட்டம் மட்டும் போதாது, நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரவு, பகலாக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், பீட்டாவை தடைச் செய்ய வேண்டும் என்றும் முழக்ங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், அறவழியில் நடந்து வரும் போராட்டத்தைக் கலைந்து செல்லும்படி காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டத்தை இயற்றினால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என்று கூறி மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்களை வலுகட்டாயமாகவும், குண்டு கட்டாக தூக்கி ஒவ்வொருவராக வெளியேற்றி வருகின்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்ட வட்டத்திற்குள் வந்து உட்காருகின்றனர். போராட்டக்காரர்கள் சல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருப்போம் என்று வலிமையோடு உட்கார்ந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.