Cakes bribery costs Collectors the police not take action Immolation demoralized worker
கன்னியாகுமரி
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துறை அலுவலர் லஞ்சம் கேட்டதாக பலமுறை ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த தொழிலாளி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருவட்டார் வீயனூரை சேர்ந்த தொழிலாளி விக்ரமதாஸ். இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு ஒன்றை அளித்தார்.
மேலும், தனது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவரை காவலாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் விக்ரமதாஸ் நேற்று காலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வெகு நேரம் காத்திருந்தார். அப்போது விக்ரமதாஸ் சட்டென்று மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றியபடி ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றார்.
இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அந்த சமயத்தில் அவர் தனது உடலில் தீ வைக்க முயன்றார். அதற்குள் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனையும் பறித்தனர்.
இதுபற்றி விக்ரமதாசிடம் கேட்டபோது, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் இணைப்பு கேட்டு மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கோரிக்கை விடுத்தேன். அப்போது அந்த அதிகாரி, எனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க என்னிடம் லஞ்சம் கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன். இதன் காரணமாக எனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காமலேயே உள்ளனர்.
அதிகாரி என்னிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திலும், காவலாளர்களிடமும் மனு அளித்தேன். இவர்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு மேல் யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல்தான் ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்காக வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
அதன் பிறகு விக்ரமதாசை காவலாளர்கள், நேசமணிநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மின் வாரியத்தில் லஞ்சம் கேட்கப்பட்டது; ஆட்சியரிடமும், காவலாளரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்த்டால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
