தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகள் கைப்பற்றப்பட்டன. 

சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரிடம் சிலைகளை விற்றதாக தீனதயாளன், சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தினர். 

தொழிலதிபர் ரன்வீர் ஷா, திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்போது அவரது வீட்டில் பொன்.மாணிக்கவேல் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.  இந்த சோதனையின் போது 60 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 4 சிலைகள் ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படுகிறது.  பழமையான கோயில்களின்  தூண்கள் மற்றும் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ரன்வீர் ஷா வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரிடம் இருந்து சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சிலைகள் வாங்கப்பட்டது பற்றிய தகவல் மட்டுமே உள்ளது. ஆனால் சிலைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிலைகளை மீட்க, கிரேன்கள், லாரிகள் ரன்வீர் ஷா வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இந்த சிலைகள் எந்த காலத்தை சார்ந்தவை என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிகிறது.