சென்னை, பல்லாவரம் அருகே அரசு விரைவுப் பேருந்து ஒன்று, பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மெட்ரோ ரயில் பணிகள் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பாலத்திற்காக தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

பல்லாவரம் அருகே வந்தபோது, தூண்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால், பயணிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். 

பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக பள்ளி - கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.