Bus - motorcycle confrontation primary school teacher death ...
தருமபுரி
தருமபுரியில் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் (48). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கல்பனா. இவர் கோம்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் மோட்டார் சைக்கிளில் காளிப்பேட்டையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு சொந்த வேலையாக சென்றார். அப்போது, வேலூரில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.
சாமியாபுரம் கூட்ரோடு அருகே சென்ற போது பேருந்தும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆசிரியர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் விபத்தில் இறந்த சங்கரின் உடலை, காவலாளர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
