வேலூர்

பொன்னையில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கேட்டு இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து இடம் ஒதுக்கிய பின்பே உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள எஸ்.என்.பாளையம் அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (38). பெங்களூருவில் பெயிண்டராக வேலை பார்த்தார்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28–ஆம் தேதி பெங்களூரில் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான எஸ்.என்.பாளையம் அருந்ததி காலனிக்கு கொண்டுவரப்பட்டது.

அருந்ததி காலனி பகுதியில் யாராவது இறந்துவிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய நீண்ட தொலைவு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதால் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கடந்த 21–ஆம் தேதி அதே பகுதியில் இறந்த ஒருவரின் உடலை வைத்து வலசை ரவிச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தனர். அதன் பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இறந்த சிவாஜியின் உடலை அதே இடத்தில் புதைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்ய முயன்றபோது ஒரு தரப்பினர் அந்த இடம் கோவில் மானியம் பகுதி. அந்த இடத்தில் பிணத்தைப் புதைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிவாஜி உடல் புதைக்கப்படாமல் வீட்டிலேயே வைத்து உறவினர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இந்தப் பகுதி மக்கள் இறந்தால் இனி இந்த நிலை வரக்கூடாது. நிரந்தர சுடுகாட்டுக்கு இடம் வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சடலத்தின் அருகே தோல் பதனிடுவோர் வாரிய முன்னாள் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தலைமையில், மக்கள், உறவினர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், பொன்னை, திமிரி, ஆற்காடு காவல் ஆய்வாளர்கள் அப்பாசாமி, வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் பொன்னை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர்.

அப்போது தங்களுக்கு நிரந்தர சுடுகாட்டுக்கு இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகளிடம் கோரினர். இதனையடுத்து அருந்ததி காலனி பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் சுடுகாட்டிற்காக புதிய இடம் அதிகாரிகளால் ஒதுக்கித் தரப்பட்டது.

பின்னர் சிவாஜியன் உடல் காவல் பாதுகாப்புடன் அந்தப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.