கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்.. கதறிய அழுத தந்தை, உற்றார் உறவினர்கள்
மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். ”வீர வணக்கம் வீர வணக்கம்” என்று முழக்கங்கள் எழுப்பட்டன. பின்னர் 11 ஆம் வகுப்பு புத்தகங்களுடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த கடலூர் சேர்ந்த பிளஸ்2 மாணவி கடந்த ஜூன் 12ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளியில் 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி, தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி தரப்பில் செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேக இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பேரணியாக சென்று பள்ளியை முற்றுக்கையிடும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. திடீரென்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பள்ளியை அடித்து, உடைத்து தீ வைத்து எரித்தனர். இது கலவரமாக மாறியது.
அப்பள்ளியில் பயிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மாணவியின் உடலுக்கு தங்கள் மருத்துவர்குழு கொண்டு மறு உடற் கூராய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் மாணவி இறந்த 10 நாட்களுக்கும் மேலாக பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர்.
மேலும் படிக்க:மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது..
இதனிடையே நேற்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் மாலைக்குள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி, நியமிக்கப்பட்ட 3 மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் நடைபெற்ற மறு உடல்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜுப்மர் மருத்துவர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்க்குள் அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான் பெரிய நெசலூருக்கு கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் வீட்டை சுற்றிலும், உடல் அடக்கம் செய்யபடவுள்ள இடத்திலும் சிறப்பு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலுக்கு கிராம மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது தாயார் மாணவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.
மேலும் படிக்க:உடலை எரிக்க வேண்டாம் புதைச்சிக்கலாம்.. திடீரென முடிவை மாற்றிய கள்ளக் குறிச்சி மாணவி குடும்பத்தினர். காரணம்.??
இந்நிலையில் மயானத்திற்கு செல்லும் வழியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் வீட்டிலிருந்து மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வாகனத்தில் வைத்து மயானத்திற்கு மாணவி உடல் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது வாகனத்தின் முன்னும் பின்னும் பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் சென்றனர். பெரிய நெசலூர் கிராமத்தில் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. கிராம எல்லைகளில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது . திடீரென்று அந்த முடிவு மாற்றப்பட்டு, புதைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஏனெனில் பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உறவினர்கள் தரப்பில் புதைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இறுதி ஊர்வலம் முடிந்து மாணவியின் உடல் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுடுக்காட்டில் உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். மாணவியின் தந்தை கண்ணீர் மல்க , உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார். பின்னர் மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க:இந்த கோலத்துலயா உன்னை பார்க்கணும்.. மகளின் இறுதி ஊர்வலத்தில் நெஞ்சில் அடித்து கதறிய தாய்.!