Bulls ready for rat race Prepare the eggs sheep and soup

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொங்கல் அன்று நடக்க இருக்கும் மாட்டுவண்டி பந்தயத்திற்காக காளைகளுக்கு முட்டை, ஆட்டுக்கால் சூப் போன்றவற்றை கொடுத்து அதன் உரிமையாளர்கள் தயார்படுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியில் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இந்தப் பகுதியில் நடைபெறும் மாட்டு வண்டி போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தப் போட்டிக்காக விவசாயிகள் காளை மாடுகளை தயார்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று மாட்டுவண்டி போட்டி(ரேக்ளா ரேஸ்) நடத்தி உற்சாகமாக கொண்டாடுவர்.

கடந்த சில வருடங்களாக சல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், செக்காரக்குடியில் பந்தய மாடுகள் களையிழந்தன.

தற்போது, சல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்துள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் மாட்டு வண்டி பந்தயத்துக்க்கு அவர்களது மாடுகளை தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர், "ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு போட்டிக்காக மாடுகளை தயார் செய்து வருகிறோம். போட்டியில் பங்கேற்கும் மாடுகளை நாள்தோறும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுகிறோம். மேலும், அந்த மாடுகளுக்கு குளத்தில் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அவற்றுக்கு நாள்தோறும் தொடர்ந்து உளுந்து கரைசல் வழங்கப்படுகிறது. அதன்பிறகு உளுந்து, புண்ணாக்கு, பேரீட்சம்பழம் உணவாக கொடுக்கப்படுகிறது.

நாள்தோறும் ஒரு நாட்டுக்கோழி முட்டையும், மாடு ஓடும்போது, கால் வலிமையாக இருப்பதற்காக ஆட்டுக்கால் சூப் வழங்கி வருகிறோம்.

நாள்தோறும் வண்டியில் பூட்டி இந்த காளைகளுக்கு ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.