bullock worker asking permission to take sand again Ariyalur collector...
அரியலூர்
கள்ளிப்பாடி ஆற்றில் மீண்டும் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தினர் அரியலூர் ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று கருதிய ஆட்சியர் அவர்களிடம் நேரில் சென்று அவர்களது மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரான பாலாஜிக்கு உத்தரவிட்டார்.
இப்படி, இந்தக் கூட்டத்தில் மொத்தம் 272 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறும், இதுகுறித்து மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திரண்டு வந்து மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், "ஆண்டிமடம் பகுதியில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் பலர் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஆட்சியராக இருந்த சரவணவேல்ராஜ் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்ட கனிம வள இயக்குனர் உத்தரவின்பேரில், கடலூர் மாவட்ட வெள்ளாற்று பகுதி, கள்ளிப்பாடி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்தோம்.
தற்போது மணல் அள்ள தடை செய்யப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் மீண்டும் மேற்கண்ட ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளாற்றில் சிலிப்பனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஆற்றில் நாயகனைப்பிரியால், அண்ணாங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும்" என்று கோரினர்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட மாட்டு வண்டி தொழிலாளர் அங்கிருந்து புறப்பட்டனர்.
