புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின் போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது. அந்த வீரரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கிறது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தியை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டார். இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, ஒருமுறை துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது ஒருவர் காயமடைந்து, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதை முன்கூட்டியே அறிவித்தால், அண்டை கிராம மக்களை வெளியேற்றம் செய்தால், இதுபோன்ற அசாம்பாவிதங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இடையில் சில மாதங்கள் ஆட்சியர் தலையிட்டதன் பேரில் பயிற்சி மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஒரு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என்றார். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் உள்ளது. இம்மையத்தைச் சுற்றிலும் சுமார் 500 அடி உயரமுள்ள ஏராளமான மலைகள் உள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் உள்ளது. இங்கு, தமிழ்நாடு போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவர். தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்கணிப்பாளரின் அனுமதியைப் பெற்று பயிற்சியில் ஈடுபடுவர்.

அதன்படி, இம்மையத்தில் கடந்த சில தினங்களாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டனர். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியவை. இடையில் மலைகள் உள்ளதால் ஊருக்குள் செல்லாது. இதுபோன்று, துப்பாக்கி சுடும் பயிற்சி காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக மலைகள் மீது சிவப்பு நிற கொடிகள் பறக்கவிடப்படும். ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் உள்ளூர் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்டவை . சில நேரங்களில் காட்டுப்பகுதியில் சிதறிக்கிடக்கும் குண்டுகளை சிறுவர்கள் சேகரிப்பதுண்டு. இந்நிலையில், சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிறுவனின் தலைப்பகுதியில் ஸ்கேன் முடிவைக்கொண்டும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.