நிலையான சம்பள விகிதங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

“பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுக்கு வழங்குகிறோம் என்று ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையான சம்பள விகிதங்களை வழங்க வேண்டும்,

உடனடியாக பதவி உயர்வுக்குரிய உத்தரவை வழங்கிட வேண்டும்,

பி.எஸ்.என்.எல். மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு 30 சதவீத ஓய்வு பலன்களை வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பி.எஸ்.என்.எல். நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுத் தொடங்கியது.

இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் ரோஸ் சிறில் சேவியர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜன், ஆல்பர்ட்சிங், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இவர்கள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி வரை 24 மணி நேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்கள்.

இன்று காலை 10 மணி முதல் வேறு நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள். இந்த போராட்டம் நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இப்படி இந்த போராட்டம் தொடர் உண்ணாவிரதப் போராட்டமாகத் தொடரும்.