மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் கடந்த சில நாள்களாக பி.எஸ்.என்.எல். இணையதள சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், மின் வாரியம், பள்ளிகள், பொது இ-சேவை மையங்கள், வங்கிகள், வியாபார நிறுவனங்கள் என பல இடங்களிலும் பி.எஸ்.என்.எல் இணையதள சேவையைப் பயன்படுத்தி பணிகள் நடந்து வருகின்றன.
தனியார் இணையதள சேவைகளைப் போல் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதில்லை. மேலும் அதிவேகம் என்பது உள்ளிட்ட பல காரணங்களால் ஏராளமானோர் இந்த இணையதள சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேகம் குறைவு, இணைப்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொது இ-சேவை மையங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து காரைக்குடி வட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக ஏராளமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பிற நிறுவன இணையதள சேவைக்கு மாறி வருகின்றனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவை பாதிப்பை சரி செய்து தடையின்றி சேவை கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பது தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு..
