ஐதராபாத் சூர்யாபேட் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இவர்களுடன், குடும்பத்தினர் சிலரும் சென்று இருந்தனர். மணமக்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பினர்.

அப்போது கோவிலுக்கு வெளியே வந்த மணப்பெண் காயத்ரி திடீரென மயங்கி சரிந்தார். இதனால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லை. எனவே வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் திருமணத்துக்கு முன்பு மணமகள் காயத்ரி உணவு உண்ணாமல் நோன்பு இருந்தார். திருமணம் முடிந்ததும் அவசர அவசரமாக உணவு சாப்பிட்டதாலும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

வெட்டப்பட்ட கால் எடுத்து தலையணையாக வைத்த டாக்டர்கள்!

விபத்து ஒன்றில் சிக்கிய ஒருவரின் காலை துண்டித்த மருத்துவர்கள், அதே காலை அவருக்கு தலையணையாக வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநா் ஒருவர் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த டிராக்டருடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக படுகாயம் அடைந்தார். அவர் அருகில் இருந்த ஜான்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இளைஞரின் காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த இளைஞரின் கால் துண்டிக்கப்பட்டது. பின்னர் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கே தலையணையாக வைத்த மருத்துவர்கள் அவரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். தலையணை பற்றாக்குறையால் இவ்வாறு மருத்துவர்கள் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நோயாளிகளின் அறைக்குள் துண்டிக்கப்பட்ட கால் எப்படி வந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவனை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.